மேட்டூர் அணை பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
- சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக மலைப்பாதை யில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
- கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சேலம்:
கோடைவிடுமுறையை யொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோடை விழா மலர் கண்காட்சி முடிந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையிலும் இன்று காலை முதலே ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
அவர்கள் அண்ணா பூங்காவில் பூத்துகுலுங்கும் பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் சிறுவர், சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல விளையாடி மகிழ்ந்தனர். மேலும் படகு சவாரி செய்தும் ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக மலைப்பாதை யில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. தற்போது மழை பெய்து மலைப்பாதை முழுவதும் பசுமையாக மாறியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மலைப்பாதைகளில் நின்றும் இயற்கை காட்சியை கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலை வாசஸ்தலமான மூலிகை நிறைந்த கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொடர் விடுமுறையையொட்டி கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது கொல்லிமலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக கொல்லிமலை முழுவதும் சாரல் மழை பெய்வதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.
தொடர் மழையின் எதிரொலியால் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி மற்றும் சிற்றருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதேபோல் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மேட்டூர் அணை பூங்கா விளங்குகிறது. இந்த பூங்காவிற்கு உள்ளூர் மட்டுமின்றி சேலம், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து சென்றனர்.
இவர்கள் அணையின் கிளைவாய்க்கால் மட்டம் பகுதியில் நீண்ட நேரம் நீராடினர். பின்னர் அணை கட்டு முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பெரியவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் பூங்காவில் உள்ள ஊஞ்சல், விளையாடி மகிழ்ந்தனர்.