அஜித் குமார் மரண வழக்கு: சிறப்பு படைகள் கலைப்பு- டி.ஜி.பி. அதிரடி உத்தரவு
- தமிழக அரசின் ஆலோசனையின் படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- தனிப்படை போலீசார் உடனடியாக மாற்றுப்பணிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்புவனம் போலீஸ் டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்தின் கீழ் செயல்பட்டு வந்த தனிப்படை போலீசாரே காவலாளி அஜித்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனிப்படையில் இடம்பெற்றிருந்த 5 போலீசார்தான் காவலாளி அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கி அவரை கொலை செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
தனிப்படை காவலர்களை பொறுத்தவரையில் அவர்கள் எப்போதுமே குற்ற வழக்குகளில் விசாரணை நடத்துவதில் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஏதாவது ஒரு வழியில் குற்றவாளியிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான வித்தையை அவர்கள் கற்று வைத்திருப்பார்கள். சில குற்ற வழக்குகளில் உண்மையிலேயே தவறு செய்திருந்த குற்றவாளி உண்மையை ஒத்துக்கொள்ள மறுப்பது வழக்கம்.
இது போன்ற நேரங்களில் அந்த குற்றவாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அடித்து உண்மையை வெளிக்கொண்டு வருவது காவல்துறையில் தொடர்ச்சியாக நடந்து கொண்டே தான் இருக்கிறது.
இது போன்ற சூழலில் தான் ஒன்றும் அறியாத அப்பாவியான காவலாளி அஜித் குமாரை தனிப்படை போலீசார் 5 பேர் சரமாரியாக தாக்கி கொலை செய்திருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து உயர்போலீஸ் அதிகாரிகளின் கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைப்பதற்கு டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மண்டல ஐ.ஜி.க்கள், போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் துணை கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோரின் கீழ் செயல்படும் சிறப்பு படைகள் நிரந்தரமாக செயல்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதாவது குற்ற வழக்குகள் நடைபெற்றால் அதில் துப்பு துலக்குவதற்காக மட்டுமே துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் ஆகியோர் தங்களுக்கு கீழ் பணியாற்ற தனிபடைகளை அமைத்துக் கொள்ளலாம் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையை அமைப்பதற்கும் மண்டல ஐஜிக்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் ஆகியோரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் டிஜிபி அறிவுறுத்தி இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டுகள் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மாநகர பகுதிகளில் துணை கமிஷனர்கள் உதவி கமிஷனர்கள் ஆகியோரின் கீழ் செயல்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் உடனடியாக மாற்றுப்பணிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசாரை காவல் நிலைய பணிகள் சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசின் ஆலோசனையின் படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்படை போலீசார் இனி விசாரணை கைதிகளிடம் எல்லை மீறி நடந்து அவர்களை அடித்து துன்புறுத்துவது முற்றிலுமாக தடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி உறுதி அளித்துள்ளார்.