அ.தி.மு.க. மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டியது: உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து
- SIR-க்கு எதிராக வழக்கில் இடைக்கால மனுவாக சேர்த்துக்கொள்ள அதிமுக சார்பில் வாதம்.
- ரிட் மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து.
வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தன. அதேவேளையில் தீவிர வாக்காளர் திருத்த பணிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதிமுக சார்பில் நாங்கள் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளோம். இதனால் விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிமன்றம் "எதற்கு தாக்கல் செய்தீர்கள். இது தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று" என தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் "ஆளும் அரசே தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியமில்லை என சொல்வதை ஏற்க முடியாது. இதனால் மனுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிமன்றம் "தாக்கல் செய்யப்பட்டு இருக்கக்கூடிய மனுக்களின் கோரிக்கை வேறு உங்களது கோரிக்கை வேறு இரண்டையும் ஒன்றாக சேர்த்து விசாரித்தால் குழப்பம்தான் ஏற்படும். உங்களது மனுவை விசாரிக்க வேண்டுமென்றால் ரிட் மனுவாக தாக்கல் செய்யுங்கள். நீங்கள் விரும்பும் மாடலில் SIR நடைபெற வேண்டும் நினைக்கிறீர்களா?" எனத் தெரிவித்தது.