SSLC | தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது
- தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 219 தேர்வு மையங்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
- தேர்வு பணியில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
2025-26-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 25 ஆயிரத்து 801 பேரும், சிறைவாசித் தேர்வர்களாக 395 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரத்து 2 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 219 தேர்வு மையங்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த தேர்வில் 12,292 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் சொல்வதை எழுதுபவர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வுப் பணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், போதுமான அடிப்படை வசதிகள் தேர்வு மையங்களில் செய்து தரவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு பணியில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தேர்வு எழுதுவதற்கு தனி ஒரு அறையை ஏற்பாடு செய்திடவும், மருத்துவ உதவிகளுக்கு தேர்வு மையங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனை, டாக்டர்களின் செல்போன், தொலைபேசி எண்களை முதன்மை கண்காணிப்பாளர்கள் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை அனைத்து தேர்வு நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 9498383075, 9498383076 ஆகிய செல்போன் எண்களில் தெரிவித்து பயன்பெற கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.