நீல வழித்தடத்தில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
- இந்த முயற்சி, நெரிசலைக் குறைக்கவும், பயண வசதியை மேம்படுத்தவும், அதிக தேவை உள்ள நேரங்களில் நம்பகமான மற்றும் திறமையான மெட்ரோ சேவைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது
- இந்த ஏற்பாடு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
சென்னை விமான நிலையம், வண்ணாரப்பேட்டை, மற்றும் விம்கோ நகர் வழித்தடத்தில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
'நீல வழித்தடத்தில் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்கி வருகிறது. இந்தச் சேவைகள், காலை நெரிசல் நேரங்களிலும் (காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை) மற்றும் மாலை நெரிசல் நேரங்களிலும் (மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை) ரயில் நிலையங்களில் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்து, விரைவான பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த ஏற்பாடு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இந்த முயற்சி, நெரிசலைக் குறைக்கவும், பயண வசதியை மேம்படுத்தவும், அதிக தேவை உள்ள நேரங்களில் நம்பகமான மற்றும் திறமையான மெட்ரோ சேவைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்னை மக்களுக்கு பாதுகாப்பான, குறித்த நேரத்திலும், பயணிகளுக்கு உகந்த நகர்ப்புறப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உறுதியாக உள்ளது.' என தெரிவித்துள்ளது.
இந்த கூடுதல் ரயில்சேவை மூலம் இனி அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை, நெரிசல் மிகுந்த நேரங்களில் (காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு மணி வரை) 6 நிமிட இடைவெளி மற்றும் 3 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்கள் இதன் பிறகு முற்றிலுமாக 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.