முருகன் மாநாடு நடத்தி ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம் - விசிக விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு
- நடிகர் சத்யராஜுக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது.
- தமிழறிஞர் சண்முகதாசுக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2025-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. வரவேற்று பேசினார்.
இதில் பொதுசெயலாளர் சிந்தனை செல்வன், துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, ஆளுர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாவட்டச்செயலாளர்கள் இளங்கோ, ஜேக்கப், கரிகால்வளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில், ஆந்திராவில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் கே.எஸ்.சலமுக்கு அம்பேத்கர் சுடர் விருது, நடிகர் சத்யராஜுக்கு பெரியார் ஒளி விருது, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகுவுக்கு மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி வைத்திலிங்கத்துக்கு காமராசர் கதிர் விருது, பவுத்த ஆய்வறிஞர் ஜம்புலிங்கத்துக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருது, தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவிக்கு காயிதேமில்லத் பிறை விருது வழங்கப்பட்டது. தமிழறிஞர் சண்முகதாசுக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:- கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதில் நமக்கு பிரச்சனை இல்லை. நமக்கு பிரச்சனையே சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம்...
சாதி வைத்து தமிழ் தேசியம் எப்படி சாத்தியமாகும். ஆணவக் கொலை எப்படி நடக்கிறது? ஒரு தமிழனை இன்னொரு தமிழன் தான் வெட்டுகிறான். சாதி ஒழியாமல் எப்படி தமிழ் தேசியம் மலரும்? சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம்... அதுதான் முக்கியமான கொள்கை.
பெரியாரிடம் ஒருவர் கேட்டார்... ஆத்திகத்துக்கும்- நாத்திகத்துக்கும் என்ன வித்தியாசம் என்று... அதற்கு பெரியார், கோவிலில் கடவுள் சிலைக்கு முன்னாடி ஒரு உண்டியல் வைக்குறீங்க இல்லையா... அதுக்கு பெயர் ஆத்திகம். அந்த கடவுளையை நம்பாமல் அந்த உண்டியலுக்கு பூட்டு போடுறீங்க இல்லையா அதுக்கு பெயர் நாத்திகம். முருகனுக்காக ஒரு மாநாடு நடத்தி இவர்களை ஏமாற்றிவிட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால், முருகன் உங்களை ஏமாற்றிவிடுவார் என்றார்.