காலியாக ஓடும் ஏ.சி. மின்சார ரெயில் - கட்டணம் குறைக்கப்படுமா?
- ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகின்றனர்.
- அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் ஏ.சி. ரெயிலை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட்டது. கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ரெயில் தற்போது இயக்கப்படுகிறது.
தினமும் 8 சேவைகள் இருந்த நிலையில் மே மாதத்தில் 10 சேவைகளாக அதிகரிக்கப்பட்டன.
12 பெட்டிகளை கொண்ட ஏ.சி. ரெயிலில் உட்கார்ந்தும் நின்று கொண்டும் மொத்தம் 4,914 பயணிகள் பயணம் செய்ய முடியும். 8 சேவைகள் அடிப்படையில் 100 சதவீத பயன்பாட்டில் 39,312 பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். 50 சதவீத பயன்பாடாக இருந்தால் 19,656 பேர் செல்ல வேண்டும். 25 சதவீத பயன்பாட்டில் 9828 பேர் பயணிக்க வேண்டும்.
ஆனால் 2,800 பேர் மட்டுமே தினமும் பயணம் செய்துள்ளனர். இது ரெயிலின் மொத்த பயன்பாட்டில் 10 சதவீதம் கூட எட்டவில்லை.
ஏ.சி. மின்சார ரெயிலில் எதிர்பார்த்த கூட்டமும் இல்லை. காலியாகவே ஓடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் கட்டணம் அதிகமாகும். மேலும் மெட்ரோ ரெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்து வருவதும் ஒரு முக்கிய காரணமாகும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர். இது தவிர ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகின்றனர்.
காலை மற்றும் மாலை நெரிசல் மிகுந்த வேளையில் ஏ.சி. ரெயில் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நெரிசல் மிகுந்த கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் அதிக பயணிகளை ஈர்க்கும் திறன் இருந்த போதிலும் மோசமான நிலையே காணப்படுகிறது. ஏ.சி. மின்சார ரெயிலில் 1-5 கி.மீ. ரூ.35-ம், 11-15 கி.மீ.க்கு ரூ.40-ம், 16-25 கி.மீ. ரூ.60-ம், 26-40 கி.மீ.க்கு ரூ.85-ம், 56-60 கி.மீ.க்கு ரூ.105-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் ஏ.சி. ரெயிலை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. கட்டணத்தை குறைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தற்போது உள்ள குளறுபடிகளை சரி செய்தால் தான் புறநகர் பயணிகளை கவர முடியும்.
இனி மழைக்காலம் என்பதால் பொதுவாக ஏ.சி. ரெயில் பயணம் குறையும். அவற்றையெல்லாம் கருதி கட்டணத்தை குறைக்க பரிசீலிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.