தமிழ்நாடு செய்திகள்

பள்ளி தாளாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு: முன்னாள் போலீஸ்காரர் உட்பட 9 பேர் கைது

Published On 2025-08-22 15:06 IST   |   Update On 2025-08-22 15:06:00 IST
  • புலன் விசாரணையில் உள்ளூரை சேர்ந்த சிலர் கொள்ளையர்களுக்கு உதவியதாக இருந்தது தெரியவந்தது.
  • தலைமறைவாக உள்ள 3 கொள்ளையர்களையும் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

கரூர்:

கரூர் மாவட்டம் குளித்தலை காவேரி நகரை சேர்ந்தவர் கருணாநிதி (வயது70). இவர் திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாவித்திரி (65). குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

இவர்கள் குளித்தலை அருகே வை.புதூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த 18-ந் தேதி கருணாநிதி மற்றும் அவரது மனைவி சாவித்திரி, இளைய மகள் அபர்ணா (40) ஆகிய மூன்று பேரும் குளித்தலை காவேரி நகரில் உள்ள வீட்டில் இருந்தபோது, அதிகாலை 3 மணியளவில் காரில் வந்த 3 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அவர்கள் 3 பேரையும் கட்டிப் போட்டு 40 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கம் மற்றும் 3 கைப்பேசிகளை கொள்ளையடித்து காரில் தப்பிச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்க குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் உள்ளூரை சேர்ந்த சிலர் கொள்ளையர்களுக்கு உதவியதாக இருந்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருந்த குளித்தலையை அடுத்த பரளியைச் சேர்ந்த பிரகாஷ் (36), ரெங்கநாதன்(36), பார்த்திபன் (27), ரவிசங்கர் (26), திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த ஹரீஸ் (28), சிவகங்கையைச் சேர்ந்த கண்ணன் (35), பால் பாண்டி (32), அஜய் (28), கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த முருகேஷ்(35) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

இவர்கள் கொடுத்த தகவலின்படி தலைமறைவாக உள்ள 3 கொள்ளையர்களையும் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

இவர்களில் பிரகாஷ் காவலராக பணியாற்றி, பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை தீட்டி கொள்ளை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது, தலைமறைவாக உள்ள மூன்று நபர்களை பிடித்த பிறகு பல்வேறு உண்மை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வரும்.

நகை, பணம் குறித்து வீட்டில் ஆயுதங்களால் தாக்கி கொள்ளை அடித்துச் சென்ற மூன்று நபர்களை கைது செய்த பிறகுதான் தகவல் தெரியும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News