கிளாம்பாக்கத்தில் இருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் வெளியூர் பயணம்
- நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 936 சிறப்பு பஸ்களை சேர்த்து மொத்தம் 3028 பஸ்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணம் செய்து உள்ளனர்.
- கடந்த 4 நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்பவும், முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.
வண்டலூர்:
வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து கடந்த 4 நாட்களாக வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது.
சுபமுகூர்த்தம், விசேஷ நாட்கள் என்பதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்களில் சுமார் 6 லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் சென்று உள்ளனர்.
நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 936 சிறப்பு பஸ்களை சேர்த்து மொத்தம் 3028 பஸ்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணம் செய்து உள்ளனர். கிளாம்பாக்கத்தில் நேற்று இரவும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து இன்று அதிகாலை 2 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
கடந்த 4 நாட்களில் இயக்கப்பட்ட 11 ஆயிரத்து 26 அரசு பஸ்களில் மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்து 43 பேர் பயணம் செய்து இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறும் போது, கடந்த 4 நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்பவும், முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.
தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும். பயணிகள் முன்பதிவு செய்யும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்களை இயக்கிட வழி வகை செய்யப்படும் என்றனர்.