வால்பாறையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்- 40 பேர் படுகாயம்
- அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
- விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வால்பாறை:
திருப்பூரில் இருந்து இன்று அதிகாலை 12.30 மணி அளவில் ஒரு அரசு பஸ் வால்பாறைக்கு புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சை டிரைவர் கணேஷ் ஓட்டினார். சிவராஜ் கண்டக்டராக இருந்தார்.
திருப்பூர்-வால்பாறை பஸ்சில் 72 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த பஸ் வால்பாறை அடுத்த கவர்கள் எஸ்டேட் பகுதியின் 33-வது கொண்டை ஊசி வளைவுக்கு வந்தது. அப்போது வாகனம் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இது குறித்து தகவலறிந்த வால்பாறை போலீசார், 108 ஆம்புலன்சுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த பஸ்சில் இருந்த பயணிகளை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் கை, கால் மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு பொள்ளாச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வால்பாறையில் இன்று அதிகாலை ஒரு அரசு பஸ் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.