தமிழ்நாடு செய்திகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகளை காணலாம்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை 2 நாளில் 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்

Published On 2025-05-17 10:09 IST   |   Update On 2025-05-17 10:09:00 IST
  • இந்த ஆண்டு 127-வது மலர் கண்காட்சி 15-ந் தேதி தொடங்கியது.
  • வார விடுமுறை நாட்களான இன்றும், நாளையும், மேலும் எண்ணிக்கை அதிகமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி:

கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் அழகை கண்டுகளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுந்தோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு 127-வது மலர் கண்காட்சி 15-ந் தேதி தொடங்கியது. கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கண்காட்சியில், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 40 ஆயிரம் வண்ண மலர் மாடங்கள் இடம் பெற்றுள்ளன.

பண்டைய தமிழ் அரசர்களின் வாழ்வியல் முறைகளை வெளிக்காட்டும் வகையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மலர்களை கொண்டு 70 அடி நீளம், 20 அடி உயரத்தில் பிரமாண்ட நுழைவுவாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரோஜா, சாமந்தி, கார்னேசன் போன்ற 2 லட்சம் மலர்கள் மூலம் 75 அடி நீளம், 25 அடி உயரத்தில் பண்டைய அரசர் கால அரண்மனை அமைப்பும் பிரமிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

8 அடி உயரம், 35 அடி நீளத்தில் 50 ஆயிரத்து 400 சாமந்தி மலர்கள் மூலம் அன்னபட்சி, 4 ஆயிரம் மலர்த்தொட்டிகள், 35 ஆயிரம் சாமந்தி, ரோஜா பூக்கள் மூலம் கல்லணை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர்கள் மூலம் பண்டைய கால சிம்மாசனம், ஊஞ்சல், கண்ணாடி, இசை கருவிகள், பீரங்கி, யானை, புலி போன்ற அலங்கார வடிவமைப்புகளும் உள்ளது.

கண்காட்சி தொடங்கியதை அடுத்து ஊட்டி அரசு தாவிரவயில் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

ஊட்டி மலர் கண்காட்சியை 2 நாளில் 30 ஆயிரத்து 585 பேர் பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ஊட்டி மலர் கண்காட்சி தொடங்கிய நாளில் 14 ஆயிரத்து 5 பேரும், 2-வது நாளான நேற்று 16 ஆயிரத்து 580 பேரும் என 2 நாட்களில் 30 ஆயிரத்து 585 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.

வார விடுமுறை நாட்களான இன்றும், நாளையும், இந்த எண்ணிக்கை அதிகமாகும் என அவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News