கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
- கர்நாடகாவில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
- காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அணையில் இருந்து நேற்று காலையில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 12 மணி முதல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
இதனால் கர்நாடகாவில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் பாய்ந்து, டி.நரசிப்புராவில் உள்ள திருமகூடலு வழியாக ஒகேனக்கல் வந்து சேரும். அந்த வகையில் நேற்று கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 48 மணி நேரத்தில் தமிழகத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நாளை மதியத்துக்கு மேல் கபினி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அந்த தண்ணீர் நாளை இரவு முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.81 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 6040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று வினாடிக்கு 6829 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் பாசனத்திற்கு தொடர்ந்து 12ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 83.94 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.