சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 22 பேர் உடல்நலம் பாதிப்பு
- இறைச்சி வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைத்து கிரில் சமைத்ததால் உணவே விஷமாகி இருக்கலாம் என தெரிகிறது.
- சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓட்டலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை பாலம் பகுதியில் தனியார் அசைவ ஓட்டல் உள்ளது.
இங்கு நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 3 குழந்தைகள் மற்றும் கூடைப்பந்தாட்டம் விளையாடும் வீரர்கள் 19 பேர் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் 22 பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
நேற்று இரவு முதல் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவர்களை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் சாப்பிட்ட கிரில் சிக்கன் காலாவதியானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இறைச்சி வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைத்து கிரில் சமைத்ததால் உணவே விஷமாகி இருக்கலாம் என தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓட்டலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.