தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் உள்ள 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்: 27-ந்தேதி வரை போலீசார் கெடு

Published On 2025-04-25 12:00 IST   |   Update On 2025-04-25 12:00:00 IST
  • பாகிஸ்தானியர்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
  • மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் மட்டும் 29-ந்தேதி வரை தங்கி இருக்கலாம்.

சென்னை:

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வருகிற 27-ந்தேதி வரை மட்டுமே பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள விசா செல்லு படி ஆகும் என்றும், மருத்துவ சிகிச்சைக்காக வந்திருப்பவர்கள் மட்டும் 29-ந்தேதி வரை தங்கி இருக்கலாம் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இதன்படி அனைத்து மாநிலங்களிலும் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வருகிற 27-ந் தேதிக்குள் தமிழகத்தில் தங்கி உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் இருந்து மருத்துவ விசாவை பெற்றுக் கொண்டு சென்னையில் உள்ள 2 பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அந்நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாகவே வந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுபோன்று சிகிச்சையில் இருப்பவர்கள் மட்டும் 29-ந்தேதி வரை தங்கி இருக்கலாம் என்றும் அதன் பின்னர் அவர்களும் சென்னையை விட்டு வெளி யேறிவிட வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 200 பாகிஸ்தானியர்கள் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னையில் இருப்பதும் தெரியவந்து உள்ளது. அதே நேரத்தில் வேலூர் பகுதியிலும் சிலர் சிகிச்சைக்காக வந்து தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் கண்டிப்பாக வருகிற 29-ந்தேதிக்குள் வெளியேறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இதன் பிறகும் வெளியேறாத பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News