கோவை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள பேரிடர் மீட்பு குழுவினரை காணலாம்.
2 நாட்கள் ரெட் அலர்ட் - நீலகிரியில் அபாயகரமான 253 இடங்கள் தீவிர கண்காணிப்பு
- தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 430 நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழைக்கு பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மண்சரிவுகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.
சில வாரங்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் ஆந்திர கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
மாவட்டம் முழுவதும் 253 பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை கண்காணிப்பதற்கு என மண்டல குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 430 நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ள முகாம்களுக்கு சென்று தங்குமாறும் அறிவுறுத்தி வருகிறது.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, பொதுப்பணித் துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மழையில் மண்சரிவு, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள பொக்லைன் எந்திரங்கள், மின்சார வாகனங்கள், மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் வசிக்கு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் உள்ளனர். மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க 1077 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மழை பாதிப்புகள் ஏதாவது இருந்தால் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மாவட்டத்தில் பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். நிவாரண முகாம்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் பேரிடர் உபகரணங்களுடன் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றனர்.