நள்ளிரவில் நிர்வாண பூஜை: தட்டி கேட்ட வாலிபரை கொல்ல முயற்சி- 2 பேர் கைது
- பரசுராமன் நிர்வாணமாக நின்று பூஜை செய்து கொண்டிருந்தார்.
- ஜெயலட்சுமி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த அக்ரகாரம் பூசிக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி என்பவரின் மகன் பரசுராமன் (வயது33).
இவர் அதே பகுதியில் உள்ள ராஜாத்தி என்பவரின் வீட்டின் எதிரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பூஜை செய்துள்ளார்.
அப்போது பரசுராமன் வீட்டின் அருகே வசிக்கும் குமரன் (27) என்பவர் ஏதோ வெளிச்சம் தெரிகிறது என கருதி அருகில் சென்று பார்த்தார்.
அப்போது பரசுராமன் நிர்வாணமாக நின்று பூஜை செய்து கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குமரன் ஏன் இங்கு இப்படி பூஜை செய்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அறிந்த அருகில் இருந்தவர்கள் தட்டி கேட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது வீட்டில் குமரனும் இவரது தாயார் ஜெயலட்சுமி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது பரசுராமன் அவரது சகோதரர் சாந்தகுமார் (29) இருவரும் குமரன் வீட்டிற்கு வந்தனர். குமரனின் தலை மீது கல்லை போட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
ஜெயலட்சுமி மற்றும் குமரன் கத்தி கூச்சல் போட்டனர். அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த குமரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து ஜெயலட்சுமி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமன், சாந்தகுமார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.