தமிழ்நாடு செய்திகள்

கோடை விடுமுறையில் சொந்த ஊர் செல்ல ஆர்வம்: அரசு விரைவு பஸ்களில் 1.10 லட்சம் பேர் முன்பதிவு

Published On 2025-04-17 10:11 IST   |   Update On 2025-04-17 10:11:00 IST
  • ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது.
  • இதுவரையில் மிக குறைந்த அளவில் இருந்த முன்பதிவு ஒரு சில நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்துவிட்டதால் மாணவர்கள் விடுமுறையை கழிக்க வெளியூர் செல்கிறார்கள். உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு 24-ந் தேதியுடன் தேர்வு முடிகிறது.

கோடை விடுமுறை விடப்பட்டதால் வெளியூர் பயணம் இன்று அதிகரித்துள்ளது. நாளை புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறையாகும். அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு பொதுவான விடுமுறை வருவதால் சொந்த ஊர்களுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர்.

ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது. இதுவரையில் மிக குறைந்த அளவில் இருந்த முன்பதிவு ஒரு சில நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் மே மாதம் வரையில் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் பிற மாவட்டங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். இன்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோடை விடுமுறையில் வெளியூர் பயணம் அதிகரிக்கும். இந்த வருடம் கடந்த ஆண்டை விட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தற்போது 1000 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. அடுத்த மாதம் முதல் கூடுதலாக 100 பஸ்கள் இயக்கப்படும். புதிதாக 50 ஏ.சி.பஸ்கள் மே மாதம் விடப்படுகிறது.

இந்த மாதத்தின் இறுதியில் இருந்து வெளியூர் பயணம் மேலும் அதிகரிக்கும். கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து பயணத்தை தொடரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News