சேலத்தில் 102.2 டிகிரி வெயில் பதிவு - பொதுமக்கள் கடும் அவதி
- கடும் வெயிலால் பொதுமக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள்.
- நீண்டதூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே முடங்குகின்றனர்.
சேலம்:
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அக்னி நட்சத்திர காலத்திற்கு இணையாக வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் வெயில் சதம் அடிக்கிறது. குறிப்பாக நேற்று 102.2 டிகிரி வெயில் பதிவானது.
இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் வெயில் கொளுத்துகிறது. கடும் வெயிலால் பொதுமக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள்.
காலையில் இருந்தே அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் உஷ்ணத்தால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், அதிகளவில் வியர்வை வெளியேறுகிறது. இதனால் சீக்கிரத்திலேயே களைப்பும் ஏற்படுகிறது.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெப்ப அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள நுங்கு, இளநீர், கம்பங்கூழ், தர்பூசணி பழம், பழச்சாறு, கரும்புச்சாறு, செயற்கை குளிர்பானங்களை நாடுகின்றனர்.
மேலும் நீண்டதூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே முடங்குகின்றனர். பெரும்பாலும் மாலை நேர பயணத்தையே விரும்புகின்றனர். இரவு நேரத்தில் வீடுகளில் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கின்றன. இதனால் உடல் முழுவதும் வியர்வை வியர்த்து கொட்டுகிறது. தூங்க முடியாமல் அவதிபடுகின்றனர்
இதனிடையே தமிழகத்தில் இன்று காலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும், கடலோர பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்று குவிதல் காரணமாக இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.