தமிழ்நாடு செய்திகள்

தொடர்ந்து நீர் சூழ்ந்து இருப்பதால் 10 ஆயிரம் வாழை மரங்கள் அழுகும் அபாயம்

Published On 2025-08-08 11:44 IST   |   Update On 2025-08-08 11:44:00 IST
  • வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு லட்ச கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
  • வாழை மரத்தில் உள்ள வாழைத்தார்களை இன்று விவசாயிகள் பரிசல் மூலம் சென்று பறித்து வருகின்றனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை உள்ளடக்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 95 அடியை கடந்ததால் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள சித்தன் குட்டை, கனரா மொக்கை, வால் கரடு மற்றும் ஜே ஜே நகர் பகுதியில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும். இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மற்றும் காய்கறி பயிர் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

7 மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்ட கதளி, நேந்திரம் ரக வாழை, தற்போது குலை தள்ளி அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் தற்போது பவானி நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கியுள்ளது. இதனால் சிந்தன் குட்டை, ஜே.ஜே நகர், புதுக்காடு, கன்ரா மொக்கை பகுதிகளில் சுமார் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி விட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு லட்ச கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேல வாழை மரங்களை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் தொடர்ந்து நீரில் இருக்கும் வாழை மரங்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாழை மரத்தில் உள்ள வாழைத்தார்களை இன்று விவசாயிகள் பரிசல் மூலம் சென்று பறித்து வருகின்றனர்.

Tags:    

Similar News