மருந்து கடையில் திருடிய வாலிபர் கைது: கண்காணிப்பு கேமராவால் சிக்கினார்
- கடையில் இருப்புகளை சரிபார்க்கும்போது வெளியில் உள்ள சில பொருட்கள் மட்டும் இல்லாமல் இருந்தது.
- வாலிபர் நேற்று இரவு மீண்டும் மருந்து கடைக்கு வந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர், ஜெ.என்.சாலையில் பிரபல மருந்து கடை உள்ளது.
இந்த கடையில் 8 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே கடையில் இருந்த பொருட்கள் விற்பனை ஆகாமல் தொடர்ந்து மாயமாகி வந்தன. இதனால் ஊழியர்கள் தங்களது பணத்தில் இருந்து இழப்பை சரி கட்டி வந்தனர்.
கடையில் இருப்புகளை சரிபார்க்கும்போது வெளியில் உள்ள சில பொருட்கள் மட்டும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மருந்து வாங்க வந்த வாலிபர் ஒருவர் ஊழியர்கள் கவனிக்காத நேரத்தில் கீழே குனிந்து வெளியில் உள்ள பொருட்களை பையில் எடுத்து வைத்து விட்டு பின்னர் தான் வாங்கிய மருந்து பொருட்களுக்கு மட்டும் பணம் கொடுத்து செல்வது பதிவாகி இருந்தது.
அதே வாலிபர் நேற்று இரவு மீண்டும் மருந்து கடைக்கு வந்தார். அவரை கடை ஊழியர்கள் மடக்கி பிடித்து திருவள்ளூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபர் மருந்து கடையில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.