தமிழ்நாடு

மதுரை ரெயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்

Published On 2023-06-02 09:57 GMT   |   Update On 2023-06-02 09:57 GMT
  • பாலியல் புகார் கூறப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
  • போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்லாமல் ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை:

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக் மற்றும் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2 மாதத்திற்கும் மேலாகி வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மதுரையில் இன்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை ரெயில் நிலையம் முன்பு பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் பாலியல் புகார் கூறப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவரது உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்க முயன்றனர்.

உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இதைத்தொடர்ந்து போராட்டகாரர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ரெயில் மறியல் போராட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர்.

ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்லாமல் ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் நடத்திய மாதர் சங்க நிர்வாகி பொன்னுத் தாய், சசிகலா, இந்திய வாலிபர் சங்க நிர்வாகி கருப்புசாமி, மாணவர் சங்க செயலாளர் பாலா உள்பட 150 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News