நண்பனின் வீட்டில் ரூ.3.50 லட்சத்தை திருடி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த தொழிலாளி
- கண்ணன் ஒரு வாரத்துக்குப் பின்னர் பணத்தை பார்த்தபோது அங்கு பணம் இல்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது சிவபெருமான் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). கடந்த சில வருடங்களாக மேற்கு ஆப்பிரிக்காவில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் திருப்பூர் வந்த இவர் தாய் பாப்பம்மாளுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கண்ணன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இவரை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு அதே பகுதியை சேர்ந்த நண்பர் சிவபெருமான் (41) அழைத்துச்சென்று வந்தார். சிவபெருமான் தறி தொழிலாளியாக உள்ளார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் உள்ள வீட்டை புதுப்பிப்பது குறித்து தாயும், மகனும் பேசினர்.
இதற்காக தான் வெளிநாட்டில் வேலை செய்தபோது அனுப்பிய பணம் மற்றும் அக்கம்பக்கத்தில் கொடுத்து வைத்திருந்த பணம் என ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை சேகரித்து வீட்டில் வைத்திருந்தனர்.
இதனை தெரிந்துகொண்ட சிவபெருமான் யாருக்கும் சந்தேகம் வராதபடி பகல் நேரங்களிலேயே வீட்டிற்குள் சென்று கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருடி சென்று உள்ளார். இந்த நிலையில் கண்ணன் ஒரு வாரத்துக்குப் பின்னர் பணத்தை பார்த்தபோது அங்கு பணம் இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர் திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தார் .
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது சிவபெருமான் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 75 ஆயிரம் பணத்தை மட்டும் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள பணத்தை தான் வாங்கிய கடனை அடைத்துள்ளதுடன், நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்தும் வெளியிடங்களுக்கு சென்றும் உல்லாசமாக இருந்து செலவழித்துள்ளார். சிவபெருமானை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.