தமிழ்நாடு செய்திகள்

சென்னை பெண் கொலையில் கள்ளக்காதலியுடன் மாயமான வாலிபர் பல்லடத்தில் கைது

Published On 2023-10-24 13:07 IST   |   Update On 2023-10-24 13:07:00 IST
  • படுகாயங்களுடன் ஜாய் களஞ்சியம் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
  • கைதான ஏசுராஜா திண்டுக்கல் சிறையிலும், பத்மினி நிலக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

வத்தலக்குண்டு:

சென்னையை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் முதியோர் இல்லம் நடத்தி வந்தார். கடந்த மாதம் தனது மனைவி ஜாய் களஞ்சியத்துடன் (வயது 55) வத்தலக்குண்டு வந்தார். முதியோர் இல்லத்தில் மனைவியை விட்டுவிட்டு செல்வராஜ் சென்னை சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி அவரை தாக்கி கொல்ல முயற்சி நடந்தது. படுகாயங்களுடன் ஜாய் களஞ்சியம் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் முதியோர் இல்லத்தில் காவலாளியாக இருந்த ஏசுராஜா (36) என்பவர்தான் ஜாய் களஞ்சியத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

மேலும் அவரது காரில் இருந்து தப்ப முயன்றபோது திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே டீசல் தீர்ந்ததால் அங்கேயே நிறுத்திவிட்டு ஏசுராஜா தப்பி ஓடினார். அவரை வத்தலக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் கர்ணா காந்தி, சேக்அப்துல்லா தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜாய் களஞ்சியம் உயிரிழந்தார்.

இந்நிலையில் போலீசார் ஏசுராஜாவின் செல்போன் எண்ணை வைத்து தேடி வந்த நிலையில் பல்லடத்தில் அவர் தனது கள்ளக்காதலியுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று ஏசுராஜா மற்றும் அவரது கள்ளக்காதலி பத்மினி(34) ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், திருவாரூரை சேர்ந்த ஏசுராஜா என்பவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து சென்னையில் வாழ்ந்து வந்தார்.

அப்போது சென்னையை சேர்ந்த பத்மினி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இருவரும் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக வசதியான வீட்டில் வேலைக்கு சேர்ந்த அங்கு சம்பளம் வாங்கும் வரை இருந்து பின்னர் அங்கேயே கொள்ளையடித்து வேறு ஊருக்கு செல்வது வழக்கம்.

அதன்படி வத்தலக்குண்டுவில் முதியோர் இல்லம் நடத்தி வந்த ஜாய் களஞ்சியத்தை தீர்த்துவிட்டு அவரிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தனர். ஆனால் பணம் இல்லாததால் அவர் அணிந்திருந்த நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். பல்லடத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஏசுராஜா தனது முகவரி மற்றும் செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக அணைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மீண்டும் இயங்கியதால் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைதான ஏசுராஜா திண்டுக்கல் சிறையிலும், பத்மினி நிலக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர். 

Tags:    

Similar News