ஊட்டியில் லாரியை மறித்த காட்டு யானை- டிரைவர் அலறியடித்து ஓட்டம்
- கோத்தகிரியில் இருந்து ஒரு மினி லாரி மேட்டுப்பாளையம் நோக்கி வந்தது.
- கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை அடிக்கடி தென்படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. இது அங்கு உள்ள கடைகளை முற்றுகையிடுவதும், சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறிப்பதுமாக தொடா்ந்து அட்டூழியம் செய்து வருகிறது.
இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து ஒரு மினி லாரி மேட்டுப்பாளையம் நோக்கி வந்தது. அப்போது முள்ளூா் பகுதியில் ஒற்றை காட்டு யானை திடீரென நடுரோட்டில் வழிமறித்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த டிரைவர், வண்டியை நிறுத்திவிட்டு, அலறியபடி ஓட்டம் பிடித்தாா். அதன்பிறகு அந்த லாரியில் உணவு தேடிய யானை, எதுவும் கிடைக்காததால் சிறிது நேரத்துக்குப் பின் அங்கிருந்து காட்டுக்குள் சென்று மறைந்தது.
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை அடிக்கடி தென்படுகிறது. இது அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே கோத்தகிரி- மேட்டுப்பாளையம் ரோட்டில் ஒற்றை யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அதை அடா்ந்த வனப்பகுதிக்குள் அனுப்ப வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.