தமிழ்நாடு செய்திகள்

கோவை அருகே காட்டு யானை தாக்கி தோட்ட தொழிலாளி பலி

Published On 2023-10-11 09:29 IST   |   Update On 2023-10-11 09:29:00 IST
  • யானை நிற்பதை பார்த்ததும் சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார்.
  • இறந்த முதியவரின் உடலை பார்வையிட்டு, யானை மிதித்து கொன்றதை உறுதி செய்தனர்.

கோவை:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடவேடம்பட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 60).

இவர் கடந்த 1 அரை வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். பின்னர் வடிவேலாம்பாளையம் பகுதியில் தங்கி மோளப்பாளையம், வடிவேலம்பாளையம் பகுதியில் தோட்ட வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக மோளப்பாளையத்தில் உள்ள தனியார் தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு புதர் மறைவில் யானை ஒன்று மறைந்திருந்தது.

யானை நிற்பதை பார்த்ததும் சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் யானையிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் யானை விடாது துரத்தி வந்தது.

சில தூரம் சென்ற நிலையில் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து யானை சண்முகசுந்தரத்தை தாக்கியது. இதில் அவருக்கு தலை, கை, கால் என உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரின மீது ஏறியும் மிதித்து விட்டு சென்றது.

இதில் சண்முகசுந்தரம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

யானை தாக்கி முதியவர் இறந்த தகவல் அறிந்ததும் மதுக்கரை வனவர் ஐயப்பன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் இறந்த முதியவரின் உடலை பார்வையிட்டு, யானை மிதித்து கொன்றதை உறுதி செய்தனர். தொடர்ந்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து இறந்த சண்முகசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஊருக்குள் புகும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தற்போது யானை தாக்கி ஒருவர் இறந்துள்ளது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கி உள்ளது. எனவே இந்த பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி வனத்துறையினர் அந்த பகுதியில் ரோந்து மேற்கொண்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News