தமிழ்நாடு

பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்? திமுக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி

Published On 2022-08-11 14:16 GMT   |   Update On 2022-08-11 14:16 GMT
  • போதைப்பொருட்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும் என விஜயகாந்தி கோரிக்கை
  • டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

சென்னை:

தமிழகத்தில் போதை மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, அதனை விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போதை பொருளை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். முதல்வரின் நடவடிக்கை தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

அவ்வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய திமுக, 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, மதுபானங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை.

இவ்வாறு விஜயகாந்த் கூறி உள்ளார்.

Tags:    

Similar News