கிருஷ்ணா நீர் வருகை- செம்பரம்பாக்கத்துக்கு பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த மாதத்தில் பலத்த மழை கொட்டியபோது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
- பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 38 கன அடி வீதம் பேபி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்ப ரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 26-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 410 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு இன்று காலை பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் சிறப்பு பூஜை நடத்தி தண்ணீரை கால்வாயில் திறந்து விட்டனர். வினாடிக்கு 255 கனஅடி வீதம் தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி ஆகும். இன்று காலை நிலவரப்படி 19. 39 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. ஆகும். தற்போது 2.455 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
போதுமான தண்ணீர் இருக்கும் நிலையில் தற்போது பூண்டி ஏரியின் தண்ணீரும் வந்து கொண்டு இருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த மாதத்தில் பலத்த மழை கொட்டியபோது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 32.49 அடியாக பதிவானது. 2.376 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 410 கன அடியும், மழை நீர் வினாடிக்கு 170 கன அடியும் வருகிறது.
பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 38 கன அடி வீதம் பேபி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கண்டலேறு அணையில் அதிகஅளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு தொடர்ந்து இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.