தமிழ்நாடு

விநாயகர் ஊர்வலத்தில் விதிகளை மீறியதாக புகார்: பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகி உள்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2023-09-21 05:27 GMT   |   Update On 2023-09-21 05:27 GMT
  • விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று முதல் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.
  • பா.ஜ.கவினர் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்றபோது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

கவுண்டம்பாளையம்:

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த சிலைகள் அனைத்தும் நேற்று முதல் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.

கவுண்டம்பாளையம், உருமாண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், வடமதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பூஜைக்கு பிறகு நேற்று துடியலூர் பஸ் நிறுத்தத்திற்கு எடுத்து வரப்பட்டன.

பின்னர் அங்கிருந்து சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள குட்டைக்கு எடுத்து செல்லப்பட்டது.

அப்போது பா.ஜ.கவினர் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்றபோது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக துடியலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் புகார் அளித்தார்.

அதன் பேரில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க பொறுப்பாளர் நந்தகுமார், கோவை மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி துணைத்தலைவி வத்சலா, இளங்கோ, சாஜூ, கிருஷ்ணா மற்றும் பலர் மீது அனுமதியின்றி கூடியது, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், சிலை எடுத்து செல்லப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News