தமிழ்நாடு

திருமண விழாவில் கலந்து கொண்டவர்களை காணலாம்.

மாற்றுத்திறனாளி ஜோடிக்கு ஊர் கூடி நடத்திய திருமணம்

Published On 2023-06-02 10:14 GMT   |   Update On 2023-06-02 10:14 GMT
  • 57-வது வட்ட அ.தி.மு.க. செயலாளருமான சுடலைமணி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
  • தங்களது திருமணத்தை நடத்தி வைத்த ஊர் மக்கள் அனைவருக்கும் மணமக்கள் கைகூப்பி நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்பிக்நகர் அருகே உள்ள எம்.சவேரியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தங்கம். இவரது மகள் இசக்கிஅம்மாள் (வயது 39). மாற்றுத்திறனாளியான இவர் அனைவரிடமும் அன்பாக பழகி வந்துள்ளார். இவருக்கு நீண்ட காலமாக திருமணம் நடைபெறாமல் இருந்து வந்தது. இதனால் ஊர் மக்கள் இவருக்கு ஏற்ற ஒரு மணமகனை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில் சென்னை மணலி சின்னமாத்தூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் சதீஷ்குமார் (41). மாற்றுத்திறனாளியான இவருக்கும் நீண்ட காலமாக திருமணம் நடைபெறாமல் இருந்துள்ளது. இதனை அறிந்த ஊர் மக்கள் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பேசி வந்தனர்.

இதில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு எம். சவேரியார்புரத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் இவர்களது திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு ஊர் மக்கள் முன்னிலையில் நேற்று இரவு திருமண விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி 57-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெயலட்சுமி, தூத்துக்குடி தெற்கு பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளரும், 57-வது வட்ட அ.தி.மு.க. செயலாளருமான சுடலைமணி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தனர்.

ஊர் கூடி நடத்திய இந்த திருமண விழாவில் மணப்பெண் தரப்பில் அவரது உறவினர்கள் அழகேசன், பொன்லட்சுமி, மணமகன் தரப்பில் சென்னை ரத்னா உள்ளிட்ட மிகச்சிலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். தங்களது திருமணத்தை நடத்தி வைத்த ஊர் மக்கள் அனைவருக்கும் மணமக்கள் கைகூப்பி நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News