தமிழ்நாடு

குழித்துறை ரெயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

குழித்துறை ரெயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

Published On 2022-10-11 09:50 GMT   |   Update On 2022-10-11 09:50 GMT
  • குழித்துறை ரெயில்வே பயணிகள் சங்கத்தினர் விஜய்வசந்திடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
  • ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பலரிடம் விஜய் வசந்த் எம்.பி. தேவைகளை கேட்டறிந்தார்.

கன்னியாகுமரி:

குழித்துறை ரெயில் நிலையத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இன்று காலை 10 மணி அளவில் குழித்துறை ரெயில் நிலையம் சென்ற விஜய் வசந்த் எம்.பி. அங்கு இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். கழிப்பறை வசதிகள் குடிநீர் வசதிகள் சரியான முறையில் உள்ளதா என பயணிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது கழிவறை ஒன்று கட்டப்பட்டு இன்னும் பயணிகள் பயன்பாட்டிற்கு வராதநிலையில் உள்ளதை அறிந்து அதனை விரைந்து பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மேலும் குழித்துறை ரெயில்வே பயணிகள் சங்கத்தினர் விஜய்வசந்திடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். அதில் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திலிருந்து குழித்துறை ரெயில் நிலையம் வழியாக பேருந்துகள் கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும், அனந்தபுரி விரைவு ரெயிலை அதிவிரைவு ரெயிலாக வேகப்படுத்த வேண்டும், நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு செல்ல ஏதுவாக புதிய ரெயிலை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தொடர்ந்து ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பலரிடம் விஜய் வசந்த் எம்.பி. தேவைகளை கேட்டறிந்தார்

இந்த ஆய்வின்போது காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவர் டாக்டர்.பினுலால் சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், விளவங்கோடு பஞ்சாயத்து தலைவர் லைலா ரவிசங்கர், மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அல் அமீன், காங்கிரஸ் கட்சி மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், வட்டார தலைவர் பாகோடு மோகன்தாஸ், உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் பமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News