தமிழ்நாடு

தேவகோட்டையில் உள்ள சேவுகப்பெருமாளின் வீடு.

வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

Published On 2024-02-28 10:01 GMT   |   Update On 2024-02-28 10:01 GMT
  • முஹம்மது ஷரீபும் பணத்தை கட்டி விட்டு ரசீதுடன் சென்றபோது சேவுகப்பெருமாள் ஒப்புதல் அளிக்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
  • கைதான அதிகாரி சேவுகப்பெருமாளின் வீடு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரம் பகுதியில் உள்ளது.

தேவகோட்டை:

ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் முகமது சரீப் (வயது45). இவருக்கு சொந்தமாக கூரியூர் பகுதியில் நிலம் உள்ளது. இதனை வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக ராமநாதபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுக பெருமாளிடம் மனு செய்தார்.

அவர் 8 மனைகளுக்கு வளர்ச்சி கட்டணமாக ரூ.28 ஆயிரத்து 192 மற்றும் வரன்முறை படுத்துதல் கட்டணமாக ரூ.50 ஆயிரத்து 745 ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்தி ரசீது கொண்டு வரும்படி கூறியுள்ளார்.

அதன்படி முஹம்மது ஷரீபும் பணத்தை கட்டி விட்டு ரசீதுடன் சென்றபோது சேவுகப்பெருமாள் ஒப்புதல் அளிக்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

போலீசாரின் அறிவுரைப்படி லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றபோது சேவுகப்பெருமாளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கைதான அதிகாரி சேவுகப்பெருமாளின் வீடு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரம் பகுதியில் உள்ளது. நேற்று இரவு முதல் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலை அங்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் வருவாய்த்துறை முன்னிலையில் வீட்டில் சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேவுகப்பெருமாள் வருகிற அக்டோபர் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News