தமிழ்நாடு செய்திகள்

வந்தே மெட்ரோ ரெயில் தயாரிக்கும் பணி நடந்து வருவதை காணலாம்.

வந்தே மெட்ரோ ரெயில் தயாரிக்கும் பணி தீவிரம்- ரெயில்வே அதிகாரிகள் தகவல்

Published On 2024-06-18 07:40 IST   |   Update On 2024-06-18 07:40:00 IST
  • வந்தே மெட்ரோ ரெயில்கள் நாட்டில் உள்ள 125 முக்கிய நகரங்களை இணைக்க உள்ளன.
  • கபுர்தலாவில் உள்ள ரெயில் பெட்டித் தொழிற்சாலையிலும் முன்மாதிரி பெட்டிகள் உருவாக்கப்படுகிறது.

சென்னை:

சென்னை, பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்.), நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் தயாரிக்கப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது, சிறிய நகரங்களுக்கு இடையே குறுகிய வழித்தடங்களில் இயக்குவதற்காக 12 ஏ.சி. பெட்டிகள் கொண்ட வந்தே மெட்ரோ ரெயில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வந்தே மெட்ரோ ரெயில் என்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் குறுகிய தொலைவு வடிவமாகும். நகர்ப்புற பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 250 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. பயணிகளின் வசதியை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வந்தே மெட்ரோ ரெயில்கள் 100 முதல் 250 கிலோ மீட்டர் தொலைவு வரையில் இயக்கப்படுகிறது.

வந்தே மெட்ரோ ரெயில்கள் நாட்டில் உள்ள 125 முக்கிய நகரங்களை இணைக்க உள்ளன. வந்தே மெட்ரோ ரெயில்கள் தொடக்கத்தில், சென்னை- திருப்பதி, புவனேஸ்வர்- பாலாசோர், லக்னோ- கான்பூர் ஆகிய தடங்களில் இயக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வழித்தடங்களை விரிவுபடுத்துவது குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. சென்னை- அரக்கோணம் வழித்தடம் பற்றிய இறுதி முடிவு நிலுவையில் உள்ளது.

வந்தே மெட்ரோ ரெயில் வழக்கமான ரெயில் போன்று இல்லாமல், வந்தே மெட்ரோ ரெயிலின் உள்புறம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இருக்கைகள் புறநகர் ரெயில்களில் உள்ளதைப் போல் இல்லாமல், மேம்படுத்தப்பட்ட வகையில் அழகிய வடிவமைப்புடன் பல்வேறு சொகுசு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கைப்பிடிகள் மற்றும் ஒரு பெட்டியில் 2 கழிப்பறைகளுடன் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு பெட்டியிலும் 104 இருக்கைகள் மற்றும் 185 பயணிகள் நின்று பயணிக்கும் வசதியை கொண்டது. அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் ரெயில் பெட்டி வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் பெட்டிகள் 20.32 டன் எடையைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

வந்தே பாரத் ரெயில்களைப் போலல்லாமல், அதிக எண்ணிக்கையில் பயணிகள் வந்தே மெட்ரோவில் பயணிக்க முடியும். அதிக திறன் கொண்ட ரெயில் என்பதால் இதற்கு கூடுதல் சோதனை தேவைப்படுகிறது.

முறையான ஒப்புதல் கிடைக்கப்பெற்ற உடன் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரெயிலையும் வருகிற ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்தில் சோதனைக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகிறது.

 

வந்தே மெட்ரோ ரெயிலின் உட்புற தோற்றம்

விரைவாக இந்த வகை ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதிக பயணிகள் பயணம் செய்வார்கள் என்பதால் முன்மாதிரி ரெயில் ஒன்றை தயாரித்து அதனை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் சோதனை செய்த பின்னர் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் ரெயில்வே நிர்வாகம் உறுதியாக இருந்தது.

கபுர்தலாவில் உள்ள ரெயில் பெட்டித் தொழிற்சாலையிலும் முன்மாதிரி பெட்டிகள் உருவாக்கப்படுகிறது. புதிய அமைச்சகத்திடம் இருந்து சாத்தியமான வேக வரம்பு உட்பட விவரக்குறிப்புகளில் சில மாற்றங்களை ரெயில் பெட்டி தொழிற்சாலை நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்று ரெயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News