சென்னை-திருநெல்வேலிக்கு ஆம்னி பஸ்சை விட 3 மணி நேரம் முன் கூட்டியே செல்லும் வந்தே பாரத் ரெயில்
- ஆம்னி பஸ்சை ஒப்பிடும்போது கட்டணம் குறைவாகும்.
- சென்னை சென்ட்ரல்-விஜயவாடா வந்தே பாரத் ரெயில் 6 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்றடைகிறது.
சென்னை:
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயில் இன்று முதல் சேவையை தொடங்கி உள்ளது.
முழுக்க முழுக்க ஏ.சி. வசதி, உணவு, டீ, காபி, பிஸ்கட் போன்றவற்றுடன் டிக்கெட் கட்டணம் ரூ.1,665 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 7 மணி நேரம் 55 நிமிடங்களில் இந்த ரெயில் சென்றடைகிறது.
தென் மாவட்ட மக்களுக்கு வந்தே பாரத் ரெயில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டணம், பயண நேரம் குறைவாக இருப்பதால் வரும் நாட்களில் அதிகளவில் இதில் மக்கள் பயணம் செய்யக்கூடும்.
ஆம்னி பஸ்களை விட வந்தே பாரத் ரெயில் வேகமாக சென்றடைகிறது. ஏ.சி. வால்வோ ஆம்னி பஸ்கள் சென்னையில் திருநெல்வேலி செல்ல 11 மணி நேரம் ஆகிறது. கட்டணம் ரூ.2000 முதல் ரூ.3000 வரை வசூலிக்கப்படுகிறது.
ஆனால் வந்தே பாரத் ரெயிலில் 3 மணி நேரம் பயண நேரம் குறைகிறது. ஆம்னி பஸ்சை ஒப்பிடும்போது கட்டணம் குறைவாகும். 2 வேளை உணவுடன் ரூ.1665 கட்டணம். உணவு இல்லாமல் ரூ.1325 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இதே போல சென்னை சென்ட்ரல்-விஜயவாடா வந்தே பாரத் ரெயில் 6 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்றடைகிறது. ஆனால் ஆம்னி பஸ் செல்ல 8 மணி நேரம் ஆகிறது. வந்தே பாரத் ரெயிலில் விஜயவாடாவிற்கு உணவுடன் ரூ.1420-ம், உணவு இல்லாமல் ரூ.1135-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆம்னி பஸ்களில் ரூ.1,500 முதல் ரூ.2000 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லை, விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் விரைவாக தங்கள் பகுதிகளுக்கு செல்ல முடியும்.