தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்கா டிக்கெட் கட்டணம் உயருகிறது

Published On 2023-07-18 06:37 GMT   |   Update On 2023-07-18 06:47 GMT
  • வண்டலூர் பூங்காவை சுற்றிப்பார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
  • விலங்குகள் பரிமாற்றத்தின் கீழ் சிங்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னை:

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பூங்காவை சுற்றி பார்த்து அங்குள்ள அரிய வகை மிருகங்கள் மற்றும் பறவைகளை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

சராசரியாக தினமும் 2500 முதல் 3000 பேர் வரை செல்கிறார்கள். வார இறுதி நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேர் செல்கிறார்கள்.

602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 2 ஆயிரத்து 400 மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 42 வகை மிருகங்கள் மாமிச உண்ணிகள் ஆகும்.

இந்தியாவில் இருக்கும் உயிரியல் பூங்காக்களில் சிறந்த பூங்கா என்ற விருதையும் வண்டலூர் உயிரியல் பூங்கா பெற்றுள்ளது.

பூங்காவை சுற்றிபார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இனி இந்த கட்டணம் ரூ.200 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு விரைவில் அமலுக்கு வர உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர பூங்காவுக்குள் குடும்பத்துடன் பேட்டரி காரில் சுற்றிவர கட்டணம் ரூ.1550. இந்த கட்டண உயர்வின் மூலம் பூங்காவை மேலும் சிறப்பாக பராமரிக்க முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.

இந்த பூங்காவில் ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கு மேல் விலங்குகளின் உணவுக்காக செலவிடப்படுகிறது. பராமரிப்பு மற்றும் ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ.7 கோடி வரை செலவாகிறது.

விலங்குகள் பரிமாற்றத்தின் கீழ் சிங்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் காட்டு கழுதைகள், ஒட்டகசிவிங்கி, வரிக்கு திரைகள் ஆகியவையும் அதிகமாக இடம் பெறும்.

புதுடெல்லி உயிரியல் பூங்காவில் கட்டணம் ரூ.110 ஆகவும், மைசூரு உயிரியல் பூங்காவில் கட்டணம் ரூ.60 ஆகவும் உள்ளது.

வண்டலூரில் கட்டணம் ரூ.200ஆக உயர்த்தி இருப்பது மிகவும் அதிகம் என்கிறார்கள். இந்த கட்டண உயர்வால் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் பூங்காவுக்கு பொழுதுபோக்க சென்றால் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் வரை செலவாகும் என்கிறார்கள்.

Tags:    

Similar News