தமிழ்நாடு

விராலிமலையில் அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த 2 குரங்குகள்: நோயாளிகள் அதிர்ச்சி

Published On 2023-08-04 09:31 GMT   |   Update On 2023-08-04 09:31 GMT
  • புறநோயாளிகள் பிரிவில் தினமும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
  • குடிநீருக்கு தனியாக வேறு ஒரு தொட்டி பயன்படுத்தப்பட்டு வந்ததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தப்பித்தனர்.

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டார அரசு மருத்துவமனை மணப்பாறை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகள் உள்ளன.

புறநோயாளிகள் பிரிவில் தினமும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு கழிப்பறை மற்றும் பிற உபயோகத்துக்கு தனியாக ஒரு சின்டெக்ஸ் தொட்டியும், குடிநீருக்கு வேறொரு தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல் நேற்று மருத்துவமனை ஊழியர்கள் குழாயில் தண்ணீரை பிடித்து முகம் கழுவியபோது அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்தனர்.

பின்னர் அங்குள்ள புற நோயாளிகள் பிரிவு கட்டிட மாடியில் வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டியில் பார்த்தபோது அதில் 2 குரங்குகள் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது கண்டு திடுக்கிட்டனர்.

பின்னர் மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் அந்த 2 குரங்குகள் உடல்களையும் மீட்டு மருத்துவமனை பகுதியில் அடக்கம் செய்தனர்.

அதன் பின்னர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றிவிட்டு கிருமிநாசினி தெளித்து தொட்டியை சுத்தம் செய்தனர்.

குடிநீருக்கு தனியாக வேறு ஒரு தொட்டி பயன்படுத்தப்பட்டு வந்ததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தப்பித்தனர்.

இதுகுறித்து மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருக்கும் பொதுமக்கள் கூறும்போது,

விராலிமலை பகுதியில் அதிக அளவு குரங்குகள் மற்றும் மயில்களின் நடமாட்டம் உள்ளது. இருப்பினும் தொட்டியை சரியாக மூடாமல் அஜாக்கிரதையாக இருந்த காரணத்தால் தண்ணீர் தேடி வந்த குரங்குகள் தொட்டிக்குள் விழுந்து ஏற முடியாமல் இறந்துள்ளது.

இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. இதுவே குடிநீர் தொட்டியாக இருந்திருந்தால் விபரீதம் ஆகி இருக்கும். இந்த தண்ணீரில் குளித்து பயன்படுத்தியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பழைய தண்ணீர் தொட்டியை முற்றிலுமாக அகற்றி விட்டு நல்ல முறையில் மூடி இருக்கும் புதிய சின்டெக்ஸ் தொட்டியை வைக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News