தமிழ்நாடு

மறியலில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங்சாய் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

மேல்பாதியில் இருதரப்பினரிடையே மோதல்: சாலை மறியல்- போலீஸ் குவிப்பு

Published On 2023-08-19 05:24 GMT   |   Update On 2023-08-19 05:24 GMT
  • கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  • தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங்சாய் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே மேல்பாதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மே மாதம் திருவிழாவின்போது வழிபடுவதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேல்பாதியை சேர்ந்த ஒருவர் கோலியனூர் கூட்டுரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட வந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த 5 பேர் ஓட்டலுக்கு வந்தனர்.

திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து ஒருதரப்பை சேர்ந்த பிரகாஷ், பிரபு உள்ளிட்ட சிலரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

இதனால் அந்த தரப்பை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நள்ளிரவு 11.30 மணியளவில் இந்த மறியல் நடந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ்களும், கும்பகோணத்தில் இருந்து சென்னை வரும் பஸ்களும் நீண்ட வரிசையில் நின்றன. தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங்சாய் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலை கைவிட்டனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

ஏற்கனவே மேல்பாதியில் கோவிலில் வழிபடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் இருந்து வரும் நிலையில் தற்போது இருதரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேல்பாதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 

Tags:    

Similar News