தமிழ்நாடு

ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2023-12-10 05:45 GMT   |   Update On 2023-12-10 05:45 GMT
  • சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையான பொழுது போக்கு இடமாக உள்ளது.
  • மீன் பண்ணை, பாம்பு, முயல் பண்ணைகளையும் குடும்பத்துடன் பார்வையிட்டனர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாத நிலையில் வறண்ட வானிலையே நிலவுகிறது. ஆனாலும் பகலிலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. குறிப்பாக ஏற்காடு அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், சேர்வராயன் கோவில் என அனைத்து பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பார்த்து மகிழ்ந்தனர். மேலும் படகு குழாமில் படகுகளில் குடும்பத்துடன் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையான பொழுது போக்கு இடமாக உள்ளது. இயற்கையான சூழலில் மாசற்ற காற்றை சுவாசித்தபடி பூங்காவை சுற்றி பார்ப்பது மனதுக்கு புத்துணர்வை ஊட்டுகிறது. மேலும் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு பல்வேறு சாதனங்களுடன் குழந்தைகள் பொழுதுபோக்கு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு இதமான ரம்மியமான சூழல் நிலவுவதால் குழந்தைகளுடன் இன்று காலை முதலே ஏராளமானோர் உயிரியல் பூங்கா வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மான்கள், மயில்கள், குரங்குகள், பறவைகள், முதலைகள், பாம்புகள், பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று என அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தனர்.

இதே போல சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான மேட்டூர் அணைக்கு சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து அணை பூங்காவில் உள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்குகளிலும் சிறுவர்கள் ஏறி உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். மீன் பண்ணை, பாம்பு, முயல் பண்ணைகளையும் குடும்பத்துடன் பார்வையிட்டனர்.

அணை பவள விழா கோபுரத்தில் ஏறி அணையையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். இதனால் கடைகளிலும் கூட்டம் அதிகரித்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News