தமிழ்நாடு

சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை: மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து வாய்ப்பு

Published On 2023-10-30 04:16 GMT   |   Update On 2023-10-30 04:16 GMT
  • குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
  • அம்மாபேட்டை, வரட்டு பள்ளம், கோபி, பவானி, கவுந்தப்பாடி, குண்டேரி பள்ளம், கொடுமுடி, கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலையிலும் வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மதியம் 3 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது.

ஈரோடு மாநகர் பகுதியில் மதியம் லேசாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் இடியுடன் கூடிய கனமழையாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

சுமார் ஒரு மணி நேரமாக கொட்டி தீர்த்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதைப்போல் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 40 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இதேபோல் அம்மாபேட்டை, வரட்டு பள்ளம், கோபி, பவானி, கவுந்தப்பாடி, குண்டேரி பள்ளம், கொடுமுடி, கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சத்தியமங்கலத்தில் நேற்று மாலை 5 மணி யிலிருந்து இரவு 7 மணிவரை பண்ணாரி, கொத்த மங்கலம், திம்பம் மலைப்பகுதி, ராஜன் நகர் சிக்கரசம்பாளையம், கடம்பூர் மலைப்பகுதி, அணைக்கரை சுஜில்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

இதனால் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் அணைக்கரையிலிருந்து சுஜல் கரை செல்லும் வழியில் மூங்கில் மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் நேற்று இரவு முழுவதும் போக்குவரத்து பாதிப்படைந்தது.

இதனை அடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் சொல்லி வனத்துறையினர் இன்று அதிகாலையில் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பிறகு சிறிது நேரம் கழித்து மூங்கில் மரத்தை வெட்டி அகற்றிய உடன் போக்குவரத்து சீரானது.

இதேபோல் நேற்று மாலை சத்தியமங்கலத்தில் பரவலாக பெய்த மழையால் சத்தியமங்கலம்-ஊட்டி செல்லும் சாலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் மரம் ஒன்று முறிந்து நடுரோட்டில் விழுந்தது.

அந்த வழியாக செல்லும் தொட்டம்பாளையம், அய்யன் சாலை பவானிசாகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் உடனடியாக பொதுப்பணி துறைக்கு தகவல் சொல்லி வரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பிறகு 2 மணி நேரம் கழித்து மரத்தை முழுவதுமாக அகற்றிய உடன் போக்குவரத்து சீரானது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பெருந்துறை-40, ஈரோடு-28, அம்மாபேட்டை-23.40, வரட்டு பள்ளம்-23.30, கோபி-23.20, பவானி-19.40, கவுந்தப்பாடி-9.40, குண்டேரி பள்ளம்-7.80, கொடுமுடி-6, எலந்த குட்டைமேடு-5.40, கொடுமுடி-3, பவானிசாகர்-2.40.

Tags:    

Similar News