தமிழ்நாடு

கிருஷ்ணா தண்ணீரை முழுவதும் உடனே நிறுத்த வேண்டும்- ஆந்திர அரசுக்கு தமிழக அதிகாரிகள் கோரிக்கை

Published On 2022-07-19 07:30 GMT   |   Update On 2022-07-19 07:30 GMT
  • நீரியல் ஆய்வு கூடத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் கிணறு மதகு சேதமடைந்துள்ளது.
  • பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே மாதம் 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளும் முழுவதுமாக நிரம்பி விட்டதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு கடிதம் எழுதினர்.

அதன்படி கடந்த 1-ந் தேதியில் இருந்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்படுகிறது. பூண்டி ஏரி அருகே நீரியல் ஆய்வுகூடம் உள்ளது.

இந்த நீரியல் ஆய்வு கூடத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் கிணறு மதகு சேதமடைந்துள்ளது.

இந்த மதகு கிணற்றை அகற்றிவிட்டு புதிதாக 3 மதகு கிணறுகளை ரூ.10 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு சேதமடைந்த கிருஷ்ணா நீர் கால்வாய் சீரமைப்பு பணிகளும் தொடங்கப்பட உள்ளன.

இவற்றைக் கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு முழுதுமாக நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளனர்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 29.94 அடியாக பதிவாகியது. 1.725 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு விநாடிக்கு 400 கன அடி வீதமும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 13 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

Tags:    

Similar News