தமிழ்நாடு செய்திகள்

செத்து கரை ஒதுங்கிய மீன்களை புதைப்பதற்காக சேகரித்து வைத்துள்ளனர்.

கீழக்கரை அருகே கடலோரத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கியது- மீனவர்கள் அதிர்ச்சி

Published On 2022-09-02 11:21 IST   |   Update On 2022-09-02 11:21:00 IST
  • பச்சை நிறத்தண்ணீர் வரத்து அதிகரிப்பால் அந்த தண்ணீர் கரைக்கு வரும்போது கடலில் வாழும் மீன்கள் செத்து கரை ஒதுங்கியது.
  • இன்று காலை சுமார் 3 டன் மீன்கள் பெரிய பட்டினம் கடலோரத்தில் செத்து கரை ஒதுங்கி கிடந்தது.

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டினத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மீன்பிடி தொழிலையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று காலை ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது. இதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கரை ஒதுங்கிய சுமார் 3 டன் மீன்களை கூடைகளில் சேகரித்து பள்ளம் தோண்டி புதைத்தனர். இதுகுறித்து பெரியபட்டினம் மீனவர் செய்யது இபுராம்சா கூறியதாவது:-

சில நாட்களாக நடுக்கடலில் கடல் நீர் நிறம் மாறி பச்சையாக வருகிறது. கடலின் உள்பகுதி நாற்றம் வீசுகிறது. பச்சை நிறத்தண்ணீர் வரத்து அதிகரிப்பால் அந்த தண்ணீர் கரைக்கு வரும்போது கடலில் வாழும் மீன்கள் செத்து கரை ஒதுங்கியது.

கடந்த 5 ஆண்டுகளாக செப்டம்பர் மாதத்தில் செத்து கரை ஒதுங்குவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தூத்துக்குடி பகுதியில் இருந்து வரக்கூடிய கடல் நீரால் இந்த மீன்கள் செத்து ஒதுங்குவது தெரிய வருகிறது. இன்று காலை சுமார் 3 டன் மீன்கள் பெரிய பட்டினம் கடலோரத்தில் செத்து கரை ஒதுங்கி கிடந்தது.

அந்த மீன்களின் துர்நாற்றத்தால் மீனவர்கள் மீன்களை சேகரித்து பள்ளம் தோண்டி புதைத்தனர். இந்த பச்சை நிற தண்ணீர் வரத்து இருக்கும் வரை கடலில் வாழக்கூடிய மீன்கள் செத்து கரை ஒதுங்கும். இதற்கு நிரந்தர தீர்வு காண மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரியபட்டினம் கடலோரத்தில் மீன்கள் செத்து ஒதுங்குவதாக தகவல் கிடைத்ததும் எஸ்.டி.பி.ஐ. ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான் கடற்கரைக்கு சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

Tags:    

Similar News