தமிழ்நாடு

மீன்களின் ஆய்வு முடிவு வந்ததும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2023-12-20 08:00 GMT   |   Update On 2023-12-20 08:55 GMT
  • கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.
  • எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

பொன்னேரி:

மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கழிவு பரவியது. கடலில் மிதந்து வரும் இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி இன்னும் நீடித்து வருகிறது.

இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைர வன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் பரவியது.

ஏராளமான மீன்களும் இறந்து கரை ஒதுங்கின. இதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து கடலில் மிதந்து வரும் எண்ணெய் கழிவு குறித்து ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.

இதற்கிடையே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி லிவிங்ஸ்டன் மற்றும் வருவாய்த்துறை, மீன்வளத்துறை அலுவலர்கள் நேரடியாக வந்து பழவேற்காடு கடல் பகுதி, பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ., மீஞ்சூர் ஒன்றியக் குழு சேர்மன்ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் பிரபு சங்கர் கூறும்போது, பழவேற்காடு கடல்பகுதியில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது இங்குள்ள மீன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன் முடிவு வந்த பின்னர் மீனவர்கள் மீன் பிடிப்பது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

ஆய்வின் போது பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கெத் பல்வந்த், வட்டாட்சியர் மதிவாணன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மிச்சாங் புயல் எச்சரிக்கையில் இருந்தே கடந்த 20 நாட்களுக்கு மேலாக பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News