தமிழ்நாடு

சிவபக்தி எனும் பெரும் தீ!

Published On 2023-01-31 14:34 GMT   |   Update On 2023-01-31 14:34 GMT
  • தென்கைலாய பக்திப்பேரவை மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரையை நடத்துகிறது.
  • பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர்.

ஒரு மனிதன் தன்னையும் தனது தேவைகளையும் முன்னிலைப்படுத்தாமல் சரணடையும் இடம்தான் பக்தி. எம்மதமாயினும், கலாச்சாரமாயினும் பக்தி என்பது எல்லா மனிதர்களையும் கரைக்கும் தீ. நமது கலாச்சாரத்தின் சிவபக்தி என்பது பாரதத்தின் கடைக்கோடி கிராமங்களின் எளிமையான மனிதர்களிடம் கூட சகஜமாக காணமுடியும். ஆனால் காலமாற்றத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகும் பல புனிதங்களில் பக்தியும் ஒன்று என நாம் வருந்தும் இந்த சூழலில், பக்தி என்பது இப்போதும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது என்பதை இந்த பக்தர் கூட்டத்திடம் கண்கூடாகக் காணமுடிகிறது.

தென்கைலாய பக்திப்பேரவை ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரையை நடத்துகிறது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களின் வயது, பாலினம், பணி மற்றும் பொருளாதார சூழ்நிலை என அனைத்தையும் கடந்து சிவனின் அருள் பெற, 42 நாட்கள் விரதமிருந்து தென்கயிலாயம் என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை செல்கின்றனர். ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் இந்த யாத்திரை நடைபெற்றாலும், வருடத்தில் ஒருமுறை வரும் மஹாசிவராத்திரியின்போது இந்த சிவாங்கா யாத்திரை, ஆதியோகி ரத யாத்திரையோடு இணைந்து மிக விமரிசையாக நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர். இருவேளை உணவு, சிவநமஸ்காரம் எனும் யோகப்பயிற்சி, 21 பேரிடம் பிச்சை எடுத்தல் உள்ளிட்ட செயல்முறைகளோடு மிகத் தீவிரமான பக்தியில் இருக்கின்றனர்.

நாம் புராண கதைகளில் படித்த ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்றோர் அவர்களது பக்திக்கு பெயர் போனவர்கள். கடவுள்களையே அவர்கள் முன் இறங்கி வரச்செய்யும் அளவிற்கான தீவிரமான பக்தர்களான ஆண்டாள், பூசலார் உள்ளிட்ட பலரை நாம் அவர்களை கடவுளாகவே பார்த்து வணங்கவும் செய்கிறோம். இந்த தலைமுறையினரான நாம் அத்தகைய தீவிரமான மனிதர்களை பற்றி படித்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் நம் சமகாலத்தில் நம்மைப்போலவே சமூக வாழ்க்கையில் இருந்துகொண்டே அப்படிப்பட்ட தீவிரமான பக்தர்களாகவும் இருக்கிறார்கள் இந்த சிவாங்கா சாதகர்கள்.

இந்த தீவிரம் எந்த அளவிற்கெனில், சென்னை, நாகர்கோயில் உள்ளிட்ட தொலைவான ஊர்களிலிருந்தும்கூட கோவை ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்தியில் கலந்துகொள்ள பாதயாத்திரையாக நடந்தே வருகின்றனர். அதிலும் அவர்கள் ஆதியோகி, நாயன்மார்கள் ஆகியோர் கொண்ட ரதங்களை 500 கிலோ மீட்டர், 700 கிலோ மீட்டர் எனும் அசாத்திய தூரங்களை கடந்து இழுத்து வருகின்றனர். அவர்களும் அனைவரையும் போல பணி, தொழில் செய்பவர்கள்தான் எனினும், தங்களின் பக்தியின் தீவிரத்தால் உந்தப்பட்டு இப்படிப்பட்ட கடுமையான செயல்களையும் அன்பாக கசிந்துருகி செய்வது மிகுந்த வியப்பை தருகிறது.

ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் முதல் 64 வயதுள்ள பெரியவர் வரை பலரும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டு 20 நாட்களுக்கும் மேலாக இந்த தொலைதூரப்பயணத்தை அற்புதமாக நிறைவுசெய்கின்றனர். நிறைவு செய்வதோடு நின்றுவிடாமல், 7 மலைத்தொடர்களையுடைய தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறி அங்குள்ள சுயம்புவாக வீற்றிருக்கும் ஈசனை கண்டுருகி மலை இறங்குகின்றனர். அதனைத்தொடர்ந்து அன்று இரவு முழுக்க சத்குரு அவர்களின் முன்னிலையில் நிகழும் மஹாசிவராத்திரி நிகழ்விலும் பங்கேற்கின்றனர்.

இப்படி தொடர்ந்து 6 வருடங்கள், 7 வருடங்கள் என தொடர்ந்து வருகின்றனர். நம்முடன் வீட்டில் இருக்கும் நமது பெரியவர்கள், சமூகத்தில் இருக்கும் அந்த வயதுடையவர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள், எத்தனை அவஸ்தைகளோடு வாழ்க்கையை கழிக்கிறார்கள் என்று பார்க்கையில், இந்த சாதகர்கள் தங்கள் உச்சகட்ட பக்தியின் தீவிரத்தில் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட பெருஞ்செயலை அனாசயமாக செய்வதில் அந்த பக்தியின் வீச்சு எத்தனை அற்புதமானது என்பதை உணரமுடிகிறது.

Tags:    

Similar News