தமிழ்நாடு செய்திகள்

காருக்கு அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளை 30 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்ற கார்

Published On 2023-08-22 13:23 IST   |   Update On 2023-08-22 13:23:00 IST
  • காருக்கு அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளை தர தரவென்று சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றுள்ளது.
  • வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள ஷியாம்பூர் நகரில் இரவு நேரத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அப்போது விபத்தில் சிக்கியவரின் மோட்டார் சைக்கிள், விபத்தை ஏற்படுத்திய காருக்கு அடியில் சிக்கி கொண்டது. ஆனால் இதை கார் டிரைவர் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. அவர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டி அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த விபத்தை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் காரை துரத்தி உள்ளனர்.

அப்போது காருக்கு அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளை தர தரவென்று சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றுள்ளது. மேலும் கார் சென்ற பாதைகளில் நெருப்பு பொறியுடன் மோட்டார் சைக்கிளை இழுத்து சென்ற வீடியோக்கள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இதற்கிடையே சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் காரை ஓட்டி சென்ற டிரைவர் ஒரு கட்டத்தில் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார். அவரை துரத்தி வந்தவர்கள் அந்த காரை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News