தமிழ்நாடு செய்திகள்

தை அமாவாசை வழிபாடு- அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் அணிவகுத்து வந்த விவசாயிகள்

Published On 2023-01-21 11:17 IST   |   Update On 2023-01-21 11:17:00 IST
  • பஞ்சலிங்க அருவி, பாலாற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
  • தாராபுரம் அமராவதி ஆற்றில் தை அமாவாசையையொட்டி பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் மலைமேல் பஞ்சலிங்கம் அருவி, அடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தலமாக உள்ள திருமூர்த்திமலையில் தை, புரட்டாசி, ஆடி அமாவாசை தினங்கள் சிறப்பானதாகும்.

இந்தநிலையில் இன்று தை அமாவாசையையொட்டி உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பஞ்சலிங்க அருவி, பாலாற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை, பொள்ளாச்சி என சுற்றுப்புற விவசாயிகள் தை பட்ட சாகுபடியை தொடங்குவதற்கு முன் அமணலிங்கேஸ்வரரை வழிபடுவதையும், வேளாண் வளம், கால்நடை செல்வங்கள் பெருக மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்து மும்மூர்த்திகளை வழிபடுவதை பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர். இன்று தை அமாவாசையையொட்டி சுற்றுப்பகுதியிலுள்ள விவசாயிகள் நூற்றுக்கணக்கான ரேக்ளா, சவாரி வண்டி மற்றும் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளில் வந்தனர். மாட்டு வண்டிகளின் அணிவகுப்பால் திருமூர்த்தி மலை களை கட்டியது.

தாராபுரம் அமராவதி ஆற்றில் தை அமாவாசையையொட்டி பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தினர். இதனால் காலை முதலே அமராவதி ஆற்றில் பொதுமக்கள் குவிந்தனர். இதேபோன்று திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றங்கரையோர இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

Similar News