தமிழ்நாடு

கம்பம் அருகே உள்ள காந்தியடிகள் கோவில் மற்றும் மகாத்மாவின் வெண்கலச்சிலை.

மகாத்மா காந்திக்கு சுதந்திர போராட்ட தியாகிகளால் உருவாக்கப்பட்ட கோவில்

Published On 2022-08-13 09:38 GMT   |   Update On 2022-08-13 09:38 GMT
  • அனைத்து சமுதாய மக்கள் ஒத்துழைப்புடன், அவர்கள் அளித்த நன்கொடையின் உதவியினால் 6 மாதங்களில் இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இ
  • காந்தி கோவிலில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல்வேறு தேசத்தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளது.

கம்பம்:

நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற தலைவர்கள் போராடி தங்கள் இன்னுயிரை நீத்துள்ளனர். அவர்களின் தேசப்பற்று புத்தகங்களில் வரலாறாக மட்டுமே நிலைத்து நிற்கிறது. ஆனால் இந்த மண்ணில் பிறந்து மகாத்மாவாக மறைந்த காந்தியடிகளுக்கு தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டியில் சுதந்திர போராட்ட தியாகிகள் கட்டிய கோவில் இன்று வரை மக்களால் போற்றி வணங்கப்படுகிறது.

இதே கிராமத்தை சேர்ந்த பரமசிவம், முன்னாள் எம்.பி. சக்திவடிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியராஜ், கிருஷ்ணசாமி, சாமாண்டி, குந்திலிராமசாமி, வீரச்சாமி, சுப்பிரமணியன், சுருளியாண்டி, பழனிவேல் உள்பட 80-க்கும் மேற்பட்ட தியாகிகள் சுதந்திர போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்தி உள்ளனர். இவர்கள் அனைவரும் சுதந்திரத்திற்கு பின் மகாத்மா காந்திக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், சுதந்திர போராட்டத்தை என்றென்றும் நினைவுகூரும் வகையிலும் கடந்த 1985-ம் ஆண்டு கோவில் கட்டினர்.

அனைத்து சமுதாய மக்கள் ஒத்துழைப்புடன், அவர்கள் அளித்த நன்கொடையின் உதவியினால் 6 மாதங்களில் இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு மகாத்மா காந்திக்கு வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை அப்போதைய துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.

காந்தி கோவிலில் ஒரு சன்னதியில் காந்தியடிகளும், மற்றொரு சன்னதியில் கஸ்தூரிபாயும் தனித்தனியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் தினமும் 3 கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனி அர்ச்சகரும் நியமிக்கப்பட்டுள்ளார். காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

இந்த கோவிலில் சிவபெருமான் மகாகணபதி, துர்க்கையம்மன், லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இருந்தபோதும் காந்திக்கும், கஸ்தூரிபாய்க்கும்தான் முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவிக்கையில்,

கடந்த 1928-ம் ஆண்டு முதலே இந்த மண்ணில் சுதந்திர போராட்ட இயக்கம் தீவிரமாக வளர தொடங்கியது. இந்த மண்ணை சேர்ந்த சக்திவடிவேல், பாண்டியராஜ் உள்பட ஏராளமானோர் தங்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி கொண்டனர்.

கள்ளுக்கடை மறியல், உப்பு சத்தியாகிரக போராட்டங்களில் பங்கெடுக்க ஆங்கிலேயரின் கண்களில் படாமல் தினமும் 40 கி.மீ. தூரம் நடந்து சென்று வருவார்கள். குறிப்பாக சக்திவடிவேல் இந்த போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். பின்நாளில் அவர் எம்.எல்.ஏ.வாகவும், எம்.பி.யாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காந்திஜியின் உடல் 1948-ம் ஆண்டு தகனம் செய்யப்பட்ட பிறகு அவரது அஸ்தி பல பாகங்களாக பிரிக்கப்பட்டு இந்தியாவில் பல நகரங்களுக்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சக்திவடிவேல் முயற்சியால் இங்கும், அஸ்தி கொண்டுவரப்பட்டது. அப்போது ஏராளமான மக்கள் அந்த அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின் அஸ்தி சுருளிஅருவியில் கரைக்கப்பட்டது.

அவரது அஸ்தி வைக்கப்பட்ட இடமே தற்போது காந்தியடிகள் கோவிலாக உள்ளது. அவர்கள் தெரிவிக்கையில், இந்த கோவில் காலம் காலமாக காந்தியடிகள் பெயரையும், இந்திய சுதந்திரத்தின் பெயரையும் நினைவுகூரும் வகையில் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி நாங்கள் இந்த கோவிலை தொடர்ந்து பராமரித்து வருகிறோம். எங்களுக்கு பிறகு வரும் சந்ததியினரும் இதனை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.

காந்தி கோவிலில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல்வேறு தேசத்தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளது. இங்கு வரும் குழந்தைகளுக்கு அவர்களைப்பற்றி எடுத்துக்கூறி சுதந்திரத்தின் அருமையை அவர்களுக்கு விளக்கி வருகிறோம் என்றார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் காந்தியடிகள் கோவிலும் மூவர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News