தமிழ்நாடு

கலர்பிரிண்டருடன் கைதான அப்துல் அகீம், கைதான காஜா மைதீன், உபைஸ் அலி.

செல்போன் செயலி மூலம் கலர் பிரிண்ட் எடுத்து ரூ.20 லட்சம் கடனை அடைக்க கள்ளநோட்டு அச்சடித்த வாலிபர்கள்

Published On 2023-08-14 04:10 GMT   |   Update On 2023-08-14 04:10 GMT
  • ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பார்த்த அண்ணாதுரை அவை கள்ள நோட்டுகள் என்பதை தெரிந்து கொண்டார்.
  • கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த நபர் ரூ.200 நோட்டுகள் 3 கொடுத்து இறைச்சி வாங்கினார்.

ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பார்த்த அண்ணாதுரை அவை கள்ள நோட்டுகள் என்பதை தெரிந்து கொண்டார். இதையடுத்து அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கரூர் மாவட்டம், பள்ளிப்பட்டியை சேர்ந்த உபைஸ் அலி (24) என்பதும், இவர் மேட்டூர் சதுரங்காடில் உள்ள காஜா மொய்தீன் (40) என்பவருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து சம்பந் தப்பட்ட பேன்சி ஸ்டோரில் மேட்டூர் டி.எஸ்.பி மரியமுத்து மற்றும் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் கலர் பிரிண்டரை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது கண்டுபி டிக்கப்பட்டது. இதையடுத்து கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய செல்போன, கலர் பிரிண்டர், கள்ள நோட்டுகள், காகிதத் தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-

மேட்டூர் காவேரி நகரை சேர்ந்த முகமது அலீபா மகனான காஜாமைதீன் (40) மேட்டூரில் 3 இடங்களில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

இவருக்கு ரூ.20 லட்சம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைப்பதற்காக திட்டமிட்ட அவர் தனது உறவினரான தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மஜீத் தெருவை சேர்ந்த முகமது பாபு மகன் அப்துல் அகீம் (24), தனது கடையில் வேலை பார்த்த உபைஸ் அலி (24) என்பவரையும் மேட்டூருக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் 3 பேரும் மேட்டூர் சதுரங்காடியில் பேன்ஸி ஸ்டோரில் கலர் பிரிண்டர் ஒன்றை வைத்து, அதில் 200 ரூபாய் நோட்டுகளை செல்போன் செயலி மூலமாக நகலெடுத்து, மேட்டூர் முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

நேற்று காஜாமைதீன் நகல் எடுக்கப்பட்ட 200 ரூபாய் நோட்டுகளை உபைஸ் அலியிடம் கொடுத்து நாட்டுக் கோழி வாங்கி வரும்படி அனுப்பி வைத்தார்.

இந்த நோட்டுகள் போலியானவை என இறைச்சிக் கடைக்காரர் கண்டுபிடித்து விட்டதால் இந்த கும்பல் சிக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கடை உரிமையாளர் காஜா மைதீன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

மேலும் இவர்களுக்கு கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்றும், எவ்வளவு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News