தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் ரூ.25 லட்சத்துக்கு புலிக்குட்டி விற்பனைக்கு உள்ளதாக ஆன்லைனில் விளம்பரம்- வாலிபர் கைது

Published On 2022-09-07 10:26 IST   |   Update On 2022-09-07 10:26:00 IST
  • சென்னை அம்பத்தூரை சேர்ந்த அவரது நண்பர் தமிழிடமும் விசாரித்து வருகின்றனர்.
  • வேலூர் வனத்துறையினர் பார்த்திபனை பிடித்து கைது செய்தனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் மற்றும் ஆன்லைனில் தேசிய விலங்கான புலிக்குட்டி ரூ‌.25 லட்சத்திற்கு விற்பனை செய்ய தயாராக உள்ளது. தேவைப்படுபவர்கள் அணுகலாம் என்று விளம்பரம் செய்தனர். இதே போல சென்னை பகுதிகளிலும் இந்த விளம்பரம் ஆன்லைனில் வலம் வந்தது.

இதுகுறித்து வேலூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. வேலூர் வனத்துறையினர் வாட்ஸ் அப்பில் வந்த எண் குறித்து விசாரணை நடத்தினர்.

இதில் அந்த செல்போன் வைத்திருப்பவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 24) என்பதும் அவர் தற்போது வேலூர் சார்பானா மேட்டில் வசித்து வருவது தெரியவந்தது.

வேலூர் வனத்துறையினர் பார்த்திபனை பிடித்து கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் தமிழ். இவர் பார்த்திபனின் நெருங்கிய நண்பர். சென்னையில் பெட் ஷாப் வைத்துள்ளார்.

தமிழகத்தில் விலங்குகள் தொடர்பாக கண்காட்சி எங்கு நடந்தாலும் அங்கு சென்று தங்களுக்கு பிடித்த விலங்குகள் மற்றும் பறவைகளை வாங்கி வந்து பெட் ஷாப் மூலம் ஆன்லைனில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

பார்த்திபன் வாட்ஸ் அப் குரூப் மற்றும் அவரது ஸ்டேட்டசில் புலிக்குட்டி விற்பனை தொடர்பாக விளம்பரம் செய்துள்ளது வெறும் விளம்பர மோசடியா அல்லது உண்மையில் அவரிடம் புலிக்குட்டி உள்ளதா என வனத்துறையினர் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த அவரது நண்பர் தமிழிடமும் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மற்றும் சென்னையில் புலி குட்டி விற்பனை குறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News