தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் மூடல் எதிரொலி: தி.நகர் சாலை ஓரத்தில் ஜரூராக நடைபெற்ற மதுபான விற்பனை

Published On 2023-10-02 09:54 GMT   |   Update On 2023-10-02 09:54 GMT
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அனைத்து மதுக்கடைகளும் இன்று அடைக்கப்பட்டன.
  • குடிமகன்கள் எந்த பேரமும் பேசாமல் மது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் கூடுதல் பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

சென்னை:

காந்தி ஜெயந்தியையொட்டி இன்று நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மூடப்பட்டன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அனைத்து மதுக்கடைகளும் இன்று அடைக்கப்பட்டன. இன்று மதுக்கடை மூடப்படுவதை அறிந்த சிலர் நேற்றே ஏராளமான மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்தனர். அவற்றை இன்று கள்ளச்சந்தைகளில் விற்றனர். இதனால் இன்று பல இடங்களில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை ஜரூராக நடந்தது.

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலை வடக்கு போக் சாலை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. காந்தி ஜெயந்தியையொட்டி இந்த மதுக்கடையும் இன்று மூடப்பட்டு இருந்தது.

இதையடுத்து நேற்று இரவு அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் இன்று காலையில் மதுபாட்டில்களை ஸ்கூட்டரில் கொண்டு வந்து தி.நகர் ஜி.என்.செட்டி சாலை-வடக்கு போக் சாலை சந்திப்பு அருகே சாலை ஓரம் வைத்தபடி விற்றுக் கொண்டிருந்தார்.

இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள குடிமகன்களுக்கு பரவியது. மதுக்கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்ததால் விடுமுறை தினத்தை எப்படி கொண்டாடுவது என்று தவித்த குடிமகன்கள் உடனடியாக கள்ளச்சந்தையில் மது விற்கப்படும் இடத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஸ்கூட்டரில் வைத்து மது விற்றவரிடம் இருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

வழக்கமாக ரூ.140-க்கு விற்கப்படும் மதுபாட்டில்கள் அந்த நபர் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.110 விலை வைத்து ரூ.250-க்கு விற்றுக் கொண்டிருந்தார். குடிமகன்கள் எந்த பேரமும் பேசாமல் மது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் கூடுதல் பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் பட்டப்பகலில் சாலை ஓரத்தில் மது விற்பனை மிகவும் ஜரூராக நடந்தது.

அதேபோல் சென்னையின் சில இடங்களிலும் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன.

Tags:    

Similar News