தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: ஏப்.20-ந்தேதி உள்ளூர் விடுமுறை

Published On 2024-04-15 09:47 GMT   |   Update On 2024-04-15 09:47 GMT
  • சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற்றது.
  • கடைசி நாளான 23-ந்தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.

தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் நடைபெற உள்ளது.

விழாவின் கடைசி நாளான 23-ந்தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 20-ந்தேதி விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.20-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News