தமிழ்நாடு

தமிழக ஆளுநர் அப்படி பேசியதற்கு இதுதான் காரணம்... தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

Published On 2023-01-06 14:48 GMT   |   Update On 2023-01-06 14:48 GMT
  • தமிழ்நாடு, தனி நாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.
  • சில தலைவர்கள் பிரிவினை பேசுவது அதிகமாகி வருகிறது.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்" என்றார்.

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியின் 'தமிழகம்' என்ற பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

அவர் (தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி) கூறிய உட்பொருளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிரிவினைவாத கருத்துக்கள் அதிகமாக இப்பொழுது வர ஆரம்பமாகியிருக்கும் நேரத்தில் அவர் (ஆர்.என்.ரவி) அதை கூறியுள்ளார். அவர் சொல்வதில் தன்நாடு என்று எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டை தனிநாடு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற அர்த்தத்தில் அவர் (ஆர்.என்.ரவி) கூறியிருக்கிறார்.

ஏனென்றால் சமீபகாலத்தில் சில அரசியல் தலைவர்களாக இருக்கட்டும், சில இயக்கங்களின் தலைவர்களாக இருக்கட்டும் அவர்கள் பிரிவினைபேசுவது அதிகமாகி வருகிறது. ஏதோ தமிழ்நாடு தனிநாடு போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடாது

நான் தமிழ்நாட்டை சார்ந்தவள், எனது மொழி தாய்மொழி, எனது மாநிலம் தமிழ்நாடு, எனது தேசம் பாரத தேசம். நாம் பாரததேசத்தில் ஒரு அங்கம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News